திருவனந்தபுரம்:
இதயம், மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து 9 மணிநேரம் போராடி மிக சிக்கலான ஆபரேஷனை செய்து 2 வயதே ஆன குழந்தையின் இதயத்தில் இருந்த புற்றுக்கட்டியை அகற்றிய கேரளா டாக்டர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மிகவும் சிக்கலான இந்த ஆபரேஷனை பொறுப்புடன் செய்த டாக்டர்கள் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பெண் மெரின் பபீர். இவர் துபாயில் ஐ.டி. துறையில் பணியாற்றியபடி அங்கேயே தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆதி என்ற ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஆதிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
துபாயில் உள்ள மருத்துவமனையில் ஆதியை பரிசோதித்த போது இதயத்தின் பகுதியில் புற்றுக்கட்டி உருவாகி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
உடன் சொந்த ஊருக்கு திரும்பிய மெரின், கொச்சியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்க்க டாக்டர் மூசா குன்ஹி தலைமையிலான டாக்டர்கள் குழு ஆபரேஷன் மூலம் புற்றுக்கட்டி அடைப்பை நீக்க தீர்மானித்தது.
இதையடுத்து மிகவும் சிக்கலான இந்த ஆபரேஷனை 30 டாக்டர்களை கொண்ட குழு மேற்கொண்டது. சுமார் 9 மணி நேரமாக போராடி குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். ஆபரேஷனின்போது குழந்தையின் இதயம் மற்றும் மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து ஆபரேஷன் நடத்தி உள்ளனர் டாக்டர்கள்.
உலகிலேயே இந்த முறையில் நடைபெற்ற 5 வது அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தை ஆதி குணமடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.