"தம்மாத்துண்டு கொசு..."ன்னு நினைக்காதீங்க... வைச்சுடும் "ஆப்பு" நாளை கொசுக்கள் விழிப்புணர்வு தினம்... சுத்தம் பேணுவோம்... நோயின்றி வாழ்வோம்...

Sekar Tamil
தஞ்சாவூர்:
அன்னையர் தினம், தந்தையர் தினம், புத்தக தினம், நண்பர்கள் தினம் ஏன் இளைஞர்களுக்கு பிடித்த காதலர்கள் தினத்தை கூட கேட்டு இருப்பீங்க... ஆனால் கொசுக்கள் தினம்...


அடப்பாவிங்களா? இதுக்கும் ஒரு தினம் கொண்டாடுறீங்களான்னு கேட்காதீங்க... கொசுக்கள் குறித்த விழிப்புணர்வு தினம்தான் அது. இந்த தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதிதாங்க கொசுக்கள் தினம். ஏன் தெரியுங்களா... மக்களை பாதிக்கும் மலேரியா வியாதி கொசுக்கள் வாயிலாகத்தான் பரவுகிறது என்பதை ஆய்வாளர் ரொனால்டு ராஸ் என்பவர்தான் கண்டுபிடிச்சார். எப்போ... 1897ம் ஆண்டில். இதை நினைவூட்டும் வகையில் தான் ஆகஸ்ட் 20ம் தேதி கொசுக்கள் தினத்தை உருவாக்கினாங்க.


கொசுக்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. கொசுக்களை உருவாக்குவதில் நம்ம மக்களுக்குதான் அதிக பங்கு இருக்கிறது. இயற்கையாக அது உருவாக வேண்டிய அத்தனை வசதிகளையும் நம்மாளுங்களே செய்து கொடுத்திடறாங்க...


பாம்பு, தேள், பூரான், நாய், பூனை இப்படி மற்ற விலங்கினங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் உயிரிழிப்புகளை விட "தம்மாத்துண்டு"  கொசுக்கள் ஏற்படுத்தும் உயிரிழப்பே அதிகம்... அதிகம்... அதிகம்... அணுகுண்டை கூட கண்டு பயப்படாத நாடுகள் இந்த கொசுக்களை கண்டு பயப்படுகின்றன என்றால் ஆச்சரியமில்லை. 


கொசுக்கள் பறக்கும் திறன் கொண்ட சிறிய பூச்சியினம் ஆகும். அட ஆமாங்க... இதற்கு குலிசிடாயி என்ற விலங்குகள் குடும்பத்தை சேர்ந்த உயிரினம் ஆகும் என்பது தெரியுமா... அட இதை எதுக்கு தெரிஞ்சுக்கிட்டு. கடிச்சுச்சா... பட்டுன்னு அடிச்சோமா... சட்டுன்னு நசுக்கி கொன்னோமான்னுதான் நாம் இதுவரைக்கும் இருந்து வர்றோம். இன்றைக்கும் இந்த நிலைதான். இப்ப நாம ஸ்டைலா மஸ்கிடோன்னு சொல்றோமே...இதாச்சும் எப்படி வந்துச்சுன்னு தெரியுமா... ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கீசிய மொழியில் இருந்துதான் மஸ்கிடோ என்ற ஆங்கில வார்த்தை உருவாக்கப்பட்டது. இதன் அர்த்தம் சிறிய ஈ என்பதுதான். 


இந்த "தம்மாத்துண்டு கொசு" இருக்கே... எத்தனை வருஷமாக இருக்கு என்று நினைக்கிறீங்க... அது ஆச்சு டைனோசர் காலத்திலிருந்துஎன்பதுதான் உண்மையிலும் உண்மை. அதாவது 21 கோடி ஆண்டுகளாக இந்த கொசுக்கள் மனிதர்களை மட்டுமின்றி பிற விலங்குகளையும் பாடாய்படுத்தி வருகிறது. 


கொசுக்களால் ஏற்படும் நோய்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். மலேரியா, டெங்கு, மஞ்சள்காய்ச்சல், யானைக்கால் நோய் பாதிப்பு என இந்த லிஸ்ட் ஏராளம்...ஏராளம்... கொசுக்கள் உருவாக முக்கிய காரணமே தேங்கி கிடக்கும் தண்ணீர்தாங்க... கிராமத்தில் மட்டுமின்றி நகரப்பகுதியிலும் தேங்கிக்கிடக்கும் தண்ணீரே கொசுக்களின் பிறப்பிடமாக திகழ்கிறது. இப்படி தண்ணீர் தேங்குவதற்கு காரணம் நம்ம அலட்சியம்தான். இதனால்தான் சாக்கடைகளில் உருவாகி நம்ம வீட்டு சமையல் கட்டு வரை அதிகாரம் செலுத்துகின்ற இந்த கொசுக்கள்.
சரி கொசுக்களில் எத்தனை வகை இருக்குன்னு தெரியுங்களா? 3,500க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் இருக்குங்க... என்ன மயக்கம் வருதா... அப்புறம் எப்படிதான் இவ்வளவு நோய்கள் பரவுகிறது. வகைக்கு ஒன்றாக  ஒவ்வொரு நோயை உருவாக்குகின்றன. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அதிக அழிவிற்கு காரணமே இந்த கொசுக்கள்தான். 


சும்மா ஸ்ட்ரா போட்டு கூல்டிரிங்ஸ் உறிஞ்சுவது போல் ரத்தத்தை உறிஞ்சி அப்படியே வியாதியை பரப்பும் இந்த கொசுக்களுக்கு பற்கள் கிடையாதுங்க... இதன் நீண்ட குழல் போன்ற அமைப்பு தோலில் துவாரமிட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது. இது தன் எடையைப் போல் 3 மடங்கு ரத்தத்தை உறிஞ்சுகின்றன என்றால் ஆச்சரியம்தானே... அட கொய்யால கொசுக்களா என்கிறீர்களா... இருங்க இன்னும் விஷயம் இருக்கு...


உங்களுக்கு ஓ பிரிவு ரத்தமா... அப்ப நீங்க கொசுக்களுக்கு ரொம்ப பிடித்தமானவர்... அதன் இதயத்தில் உங்களுக்கும் ஓர் இடம் உண்டு. உங்க உடல் அதிக வெப்பமானதா... அப்ப உங்களையும் விடாது. அது மட்டுமா... கர்ப்பிணி பெண்கள், பெருமூச்சு விடுபவர்களும் இந்த லிஸ்டில் அடங்குவர். 


தனக்கு பிடித்தமானவர்களை... அட அதுக்கு பகல், மதியம், இரவு உணவு கொடுப்பவர்களை... அதாங்க ரத்தம்...ரத்தம் 100 அடி தூரத்தில் இருந்தாலும் மோப்பம் பிடித்து கடித்து ரத்தத்தை உறிஞ்சி அன்றைய பொழப்பை பார்த்துக்கொள்ளும். அது என்ன டாக்டரா... எப்படி நம்மை கண்டுபிடிக்குது என்கிறீர்களா... அதுக்கு என்ன காரணம் என்றால்... நம் உடம்பில் இருந்து வெளியாகும் பிரத்யேக வாசனை... நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடுதான் இது நம்மை விரும்பி தேடி வந்து கண்டுபிடிக்க காரணமாக அமைகிறது.


நீண்ட நேரம் காற்றில் மிதக்கும் இந்த கொசுக்கள் நம்மை கண்ணாமூச்சி காட்டுகின்றன. மெதுவாக பறந்தாலும் தொடர்ந்து 4 மணிநேரம் இவற்றால் பறக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... குளிர்ந்த நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும். அப்படி முட்டையிடும் கொசு இறந்துவிடும். அப்புறம் என்ற முட்டை, லார்வா, புபா மற்றும் வளர்ந்த கொசுக்கள் என்ற நான்கு நிலை இதற்கு இருக்கு. வளர்ந்த கொசுக்கள் தங்கள் உணவை (ரத்தத்தை) தேடி பறக்கின்றன... சிக்கினான்டா சேகருன்னு ஒரு ரவண்டு ஏத்திக்கிட்டு பறக்கின்றன. நாமும் அடிக்கிறோம்... தேய்க்கிறோம்... ஆனாலும் ஆட்டம் காட்டி பறந்து விடுகின்றன. 


இந்த கொசுக்கள் குறித்த விழிப்புணர்வு மட்டுமே நம்மை நோய் இல்லாத உலகிற்கு அழைத்து செல்லும் என்பதை மறந்து விடவேண்டாம்... அலட்சியமும், சுத்தம் இல்லாத நிலையும்தான்... கொசுக்களுக்கு கொண்டாட்டம் ஆகின்றன... விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்... நோயை தூர துரத்துவோம்...


Find Out More:

Related Articles: