பாங்காங்:
தாய்லாந்தில் 200 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறிய தகவல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜிகா வைரஸ் தொடர்பாக இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடாத தாய்லாந்து அரசு முதன்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தாய்லாந்து பொது சுகாதாரத்துறை அமைச்சகம் ''இதுவரை 200 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 20 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27-ம் தேதி சிங்கப்பூரில் முதன்முறையாக ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கி இதுவரை சுமார் 300 பேர் சிங்கப்பூர் நாட்டில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் ஜிகா வைரஸ் தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.