தஞ்சாவூர்:
கடல்... பரந்துவிரிந்த இந்த நீலவர்ண போர்வையின் உள்ளே மறைந்து கிடக்கும் பொக்கிஷங்கள் ஏராளம்... ஏராளம்... கிடைப்பது தாராளம். உயிர்களை உருவாக்கி... மனிதர்களுக்கு உணவாக்குவதில் இருந்து... எண்ணற்ற ஆச்சரியத்தை உள்ளடக்கியது கடல். இதில் வாழும் ஒரு உயிரினம் சங்கு.
கடலில் வாழும் மெல்லுடலிதான் இந்த சங்கு. ஓரோட்டு உடலி வகையை சேர்ந்தது. சுண்ணாம்பினாலான ஓட்டின் உட்பக்கமுள்ள காலுமெல்லா எனும் நடுப்பகுதி தூணில் சுற்றப்பட்டு இது வாழ்கிறது.
அதெல்லாம் சரி... இந்த சங்கும் ஒரு உயிரிதான் என்பதை உணர்வார்களா மனிதர்கள். இந்த சங்கு உயிரி கடலை எவ்வளவு சுத்தமாக வைத்துள்ளது என்று தெரியுமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்... அறிந்து கொள்ள வேண்டும். கடலில் உள்ள பாலிசீட்ஸ், டெரி பில்லட், யூனிஸ்ட் போன்று புழு இனங்கள்தான் சங்கு உயிரிக்கு உணவாகும் உயிரிகள்.
இதன் வாயிலாக கடலின் உயிரிப் பெருக்கத்தையும், சுகாதாரத்தையும் சம நிலையில் வைத்திருக்கும் மிகப்பெரிய காரியத்தை செய்யும் உயிரிதான் சங்குகள். ஆனால் மனிதர்கள் கண்ணில் இவை உயிரிகளாக தென்படுவதில்லை. அழகு பொருட்களாக்கி விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் கொண்டு செல்கின்றனர்.
ஒன்றா... இரண்டா... வளையல், மோதிரம், நெக்லஸ், கீசெயின், வாயில் தோரணங்கள், பொம்மைகள், மாலைகள், சட்டையின் பட்டன்கள், பேப்பர் வெயிட், காதலர்கள் பெயர்களை செதுக்க என்று அலங்கார பொருட்களாகத்தான் சங்குகளை மனிதர்கள் பார்க்கின்றனர். ஆதி காலம் முதல் ஆன்மீகத்திலும் இந்த சங்குகளின் பயன்.... பெரும் பயன்தான்.
போர்காலங்களில் மன்னர்கள் இந்த சங்குகளை போர் துவங்குவதற்கும், முடிப்பதற்கும் உபயோகித்தனர். அதுமட்டுமா... பூஜைக்கும் இந்த சங்குகள்தான் முன்னிலை வகித்தன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு முதல் இடம் பிடிப்பதும் சங்குகள்தான். இத்தகைய அற்புதம் வாய்ந்த சங்குகள் பற்றி எரியும் நெருப்பில் தூக்கி எறிந்தாலும் வெண்மை மாறாமல் இருக்கும்.
மனிதனின் வேட்டைக்கு உள்ளாகும் சங்குகள் ரூ.5 முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை போவதால் இதன் எண்ணிக்கைகள் குறைந்து கொண்டே போகின்றன. உணவுக்காகவும் சங்குகள் வேட்டையாடப்படுகின்றன.
நத்தை போல் சங்கினுள் இருக்கும் மெல்லிய உயிரினத்தின் சதைக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. சிங்கப்பூர், சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுவதால் ஏற்றுமதிக்காகவும் இந்த சங்குகள் பிடிக்கப்படுகின்றன.
அலங்கார பொருட்கள் தயாரிக்க பயன்படும் சங்குகள், மட்டிகள் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அதிகம் சிக்குகின்றன.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது அவர்கள்வி ரிக்கும் வலையில் மீன்களோடு சங்குகள், மட்டிகளும் அதிகம் பிடிப்படுகின்றன.
இதை சங்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் அலங்கார பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த சங்கு, மட்டிகளை அழகுப்படுத்தி பலவிதமான பொருட்களாக மாற்றி சுற்றுலா தலங்களில் விற்கப்படுகிறது. இதனை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் பிடிபடும் சங்குகள், மட்டிகளை வியாபாரிகள் வாங்கி கன்னியாகுமரிக்கு அதிகளவில் அனுப்புகின்றனர்.
சங்குகளின் அளவிற்கு தகுந்தாற்போல் விலை கொடுக்கப்படுகிறது. சிறிய சங்குகளை 1 ரூபாய்க்கும், பெரிய வகை சங்குகளை ரூ.10 லிருந்து ரூ.50 வரைக்கும், வரிமட்டியை 1 கிலோ 5 ரூபாய்க்கும் வாங்குகின்றனர். தூத்துக்குடி பகுதியில் இப்படி அலங்கார பொருட்கள் குடிசைத்தொழிலாகவே செய்கின்றனர்.
அழகுக்காகவும், பக்திக்காகவும் சங்குகள் பயன்படுத்தற வழக்கம் நம் இந்தியாவில்தான் அதிகம். பால் சங்குன்னு சொல்லப்படற வெண்சங்குதான் இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது. இதனால்தான் உலக அளவில் இந்த சங்கு இந்திய வெண்சங்கு என்றுதான் சொல்றாங்க.
பொதுவாக கடலில் 20 முதல் 30 அடி ஆழமுள்ள திடமற்ற மெல்லிய மணற் பகுதிகளில் சங்குகள் கூட்டமாக வாழும். இதை சங்கு படுகைகள் என்று சொல்வாங்க. உலகளவில் கடல் சார்ந்த நாடுகளில் சங்குகள் கிடைத்தாலும் இந்தியாவில் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட மன்னார்வளைகுடா, பாக்ஜலசந்தி கடல், அந்தமான், குஜராத் கடல் பகுதியிலும்தான் அதிகளவில் சங்குகள் கிடைக்கின்றன.
தமிழக கடல் பகுதியில் கிடைக்கும் வலம்புரி சங்கிற்குதான் அதிக மதிப்பு. இறை பண்பு மிக்கதாக கருதப்படும் இந்த வகை சங்குகளில் விலை அதிகம்.
எடைக்கு ஏற்ப ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை போகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... சங்கின் வாயிலாக எழுப்பப்படும் ஓசை ஓம்காரத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது. எனவேதான் கோயில் திருவிழாக்களின் போதும், மங்கல நிகழ்ச்சிகளின் போதும் சங்கொலி நாதம் எழுப்புவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்து மதத்தில் வலம்புரிச் சங்கு லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சிவன் கோயில்களில் 108 மற்றும் 1008 வெண் சங்குகளில் புனித நீர் வைத்து சங்கு பூஜைகள் நடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
மிகவும் பெருமை வாய்ந்த வலம்புரி சங்குகள் பற்றி சின்னதாக தெரிஞ்சுக்குவோம். சங்குல தலைப்பக்கம் இருக்குற இடதுபக்கம் சுற்றி போனா இடம்புரி... வலதுபக்கம் சுற்றி போனா.. வலம்புரி. நம்ம ஊரு வெண் சங்கைப் பொறுத்தவரைக்கும் எல்லா சங்கும் இடம்புரிதான்.
சங்கு போடுற லட்சக்கணக்கான முட்டைகளில் ரொம்பவே அரிதாக ஒன்று அல்லது இரண்டு மட்டும் வலம்புரியா வரும். அதனால்தான் இந்த வலம்புரி சங்குகளுக்கு செம மதிப்பு.
ஆனா ஆப்பிரிக்கா நாட்டில் நம்ம நாட்டின் வெண் சங்கு போலவே ஒரு வகை இருக்கு. லேசான மஞ்சள் கலர்ல இருக்கும் இந்த வகை சங்குகள் அனைத்தும் இயற்கையாகவே வலம்புரி சங்குதான். அந்த நாட்டின் கடல் பகுதியில் லட்சக்கணக்கில் இந்த சங்குகள் கிடைக்கிறது.
அதை இங்கு கொண்டு வந்து வலம்டபுரி சங்குன்னு விற்கிறாங்க... நம்மவர்களும் அதை போட்டி போட்டு அதிக விலை கொடுத்து வாங்குறாங்க என்று ஒரு உண்மையை போட்டு உடைத்தார் வியாபாரி ஒருவர்.
இப்படி உன்னதமான இடத்தை பிடித்துள்ள சங்குகளை நவீன மீன்பிடிப்பு முறைகளினால் சங்குகளின் வாழ்விடங்கள் சிறிது சிறிதாக அழிந்து வருவதாலும் பலவகை அரிய சங்கு இனங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இதனால் அழிந்து வரும் அரிய சங்கினங்கள் பலவற்றை அடையாளம் கண்டு மத்திய அரசு அட்டவணைப்படுத்தி இதை பிடித்தால் சிறை தண்டனை என்று அறிவித்துள்ளது.
இருப்பினும் இன்னும் பலர் திருட்டுத்தனமாக சங்குகளை வேட்டையாடி வருகின்றனர் என்பதுதான் வேதனை. மனிதரிடத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை இடம் பிடிக்கும் இந்த சங்குகளை இயற்கையாக அவர் உயிர் வாழும் வரை விட்டு வைக்க மனிதர்களுக்குதான் மனமில்லை.