வீரமும், விவேகமும் வாள்வீச்சின் இரு கண்கள்... வீரக்கலைகளின் பிறப்பிடம் தமிழகம்

Sekar Tamil
தஞ்சாவூர்:
வீரமும், ஈரமும் நிறைந்த வரலாறு தமிழகத்திற்கு உண்டு... எதிரிகளிடமும் இன்முகம் காட்டிய அரசர்கள் ஆட்சி செய்த அற்புத பூமி தமிழகம். தமிழினத்தின் பெருமைமிகு அடையாளங்களில் வேகமும், வீரமும் நிறைந்த போர்க்கலைகளும் அடக்கம். இன்று உலகம் முழுவதும் கொண்டாடும் பல்வேறு தற்காப்பு கலைகளின் தாயகமே தமிழகம் தான். இதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.


ராஜ்ஜியங்களை விரிவுப்படுத்த மட்டும் அரசர்கள் போர் புரிவதில்லை. பல நாட்டு கலைகளையும் அறிந்து கொள்ளவும், அதை தங்களின் நாட்டுக்கு எடுத்து செல்லவும் போர்புரிந்து வரலாறு உண்டு. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வீரகலைக்களை வளர்த்த பெருமை பெற்றவர்கள்.


திடகாத்திர உடலும், கிண்ணென்று இரும்பு வார்ப்பு போன்ற உடலும் கொண்ட மன்னர்கள் வீரக்கலைகளை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இப்போதும் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன. அவற்றில் ஒரு ஆயுதத்தையாவது நம்மால் தூக்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் கூறவேண்டும். அந்தளவிற்கு தங்களின் உடலை பேணி காத்து வந்துள்ளனர் மன்னர்கள்.


சேர, சோழ, பாண்டி மன்னர்களின் போற்றி வளர்த்த கலை என்றால் அது கண்டிப்பாக வாள்வீச்சு கலைதான். களத்தில் நேருக்கு நேர் நின்று தன்னை தற்காத்துக் கொண்டு எதிரியின் உயிர் எடுக்கும் போரியலின் ஒரு அங்கம்தான் வாள்வீச்சு. கனமான அந்த வாள்களை இரு கைகளில் ஏந்தி போரிட்ட மன்னர்கள் உண்டு. ஒரு கையில் கேடயமும், மற்றொரு கையில் வாளுமாக சுற்றி சுற்றி சூறாவளிபோல் மன்னர்கள் போரிட்ட காட்சிகள் நமக்கு ஓவியங்களாக கிடைக்கின்றன. இவர்கள் போற்றி வளர்த்த கலையும் இதுதான். ஒவ்வொரு மன்னரும் அவர்களுக்கு தகுந்தார் போல் வாள் வைத்திருந்தனர். 


ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை... மன்னர்களின் வாளுக்கு இரையாகிய எதிரிகளின் எண்ணிக்கை அவர்களின் பெருமையை உலகிற்கு சொல்லிக்கொண்டே இருக்கும். இந்த வாள் கலை... போர்க்களத்திற்கு மட்டுமில்லை.  வாரிசு பிரச்னையின் போதும் கையாளப்பட்டது. வாள்வீச்சில் வெல்பவர்களுக்கு ராஜ்ஜியம் சொந்தமான கதைகளும் உண்டு. இப்படி வாள் போட்டி வைத்து அதில் ஜெயிப்பவர்களுக்கு அந்நாட்டின் மன்னராக மணி மகுடம் சூட்டி மகிழ்ந்த காலமும் உண்டு,. வெற்றி அல்லது வீர மரணம் என்பதே இந்த வீரக்கலையின் எல்லை. இதில் வெற்றிப்பெற்று வரலாற்றின் பக்கங்களை பிடித்தவர்களும் உள்ளனர். 


இன்று இந்த போர்க்கலையை மேற்கு நாடுகள் தத்தெடுத்து விளையாட்டு களில் ஒன்றாக மாற்றிவிட்டன. இந்த காலத்தில் உள்ள வாள் அக்காலத்தின் வாளின் எடையில் 10ல் ஒரு பங்கு இருந்தால் பெரிய விஷயம். தளபதிகள் தேர்வின் போதும் இந்த வாள் வீச்சு கலை பெரும் பங்கு வகித்தது. இதை போற்றி... போற்றி வளர்த்தவர்கள் நம் தமிழ் மன்னர்கள்.


ஆயுதம் ஒரு பக்கம் என்றால் வெறும் குச்சியை வைத்து எதிராளியை திணறடித்த ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். இவர்கள் சிலம்ப வாத்தியார்கள் என்று அழைக்கப்பட்டனர். இது தடியடி தற்காப்புக்கலை. இதில் பல வகை உள்ளது. என்னனென்ன தெரியுங்களா? சுவடு, நெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச்சுவடு, ஒத்தைச்சுவடு, குதிரைச் சுவடு, கருப்பட்டிச்சுவடு, முக்கோணச்சுவடு, வட்டச்சுவடு, முக்கோணச்சுவடு, வட்டச்சுவடு, சர்ச்சைச்சுவடு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை என்று சிலம்பத்தில் பல அடி வரிசைகள் உள்ளது. உடலும், மனசும் ஒரு புள்ளியில் இணைந்து காற்றை கிழித்துக் கொண்டு சிலம்பங்கள் மோதும் அந்த வேகம் இருக்கிறதே... அப்பப்பா... ரகம்தான். இதில் இந்த சிலம்பாட்டத்தில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள்.


காற்றை விட வேகமாக சிலம்பம் வீசி எதிராளியை நிலைகுலைய செய்வார்கள். இந்த சிலம்பம் மணப்பெண்ணை கைப்பிடிக்க வைக்கும் போட்டியாகவும் இருந்து வந்துள்ளது.


அடுத்தது மான்கொம்பு... வாள், வில், வேல், வளரி, அடார், அரிவாள், கோடாரி, சேறுகுத்தி, நவியம், மழுவென தமிழர்களின் போர்க்கருவிகள் ஏராளமோ... ஏராளம். இதில் ஒன்றுதான் மான் கொம்பு. மான் கொம்புகளை இருகைகளிலும் ஏந்தி எதிரிகளை வீழ்த்தும் கலைதான். இது ஏறத்தாழ சிலம்பாட்டம் போன்ற வகைதான். தற்போது மான் கொம்புகளுக்கு பதிலாக இரும்பு ஆயுதம் தரித்து ஆடுகிறார்கள். வலுவாக பிடித்து கொண்டு எதிராளியை களம் காணும் போது உடலும் வளைந்து கை வேகம் காட்டும். அப்போது கையில் உள்ள மான் கொம்பு எதிராளியை பதம் பார்த்தால் ஆள் காலிதான்....


இதேபோல் முனைகள் இணைக்கப்பட்ட மெல்லிய உலோகத்தால் ஆன நீண்ட வாள்கள்தான் சுருள்வாள். லாவகமாக வீசினால் எதிராளியின் சதையை கொத்துக்கறியாக்கி விடும். இதை பயில வலிமை மட்டும் போதாது. வளையும் உடலும், விரைவும் வேகமும், விவேகமும் கண்டிப்பாக தேவை. இல்ல... வீசியவரின் உடலையே பதம் பார்த்து விடும். 


இவை எல்லாம் ஆயுதங்களுடன் போரிடுவது என்றால் வெறும் கரங்களால் தாக்குவது வர்மம். உயிர்நிலைகளின் ஓட்டம், உயிர்நிலையை சுமக்கும் நாடி, நரம்புகள், மையப்புள்ளிகளை தாக்கும் நுணுக்கமான கலைதான் வர்மக்கலை. உடலில் 12 படுவர்மம், 96 தொடு வர்மம் 1 நோக்கு வர்மம் உள்பட 109 வர்மத்தலங்கள் உண்டு, நோக்கு வர்மம் பார்வையால் எதிராளியை வசப்படுத்துவது ஆகும்.
இப்படி போர்க்கலைகளை வளர்த்த பெருமை தமிழகத்திற்கே சொந்தம்.


Find Out More:

Related Articles: