சென்னை:
சினிமா வில்லிகளை விட தற்போது சீரியல் வில்லிகள் செய்யும் வில்லத்தனங்கள் எல்லை மீறி போகிறது. இதை தடுக்க தக்க நடவடிக்கை வேண்டும் என்ற குரல் அதிகளவில் எதிரொலிக்க தொடங்கி விட்டது.
டிவி சீரியல்களில் வில்லிகள் செய்யும் வில்லத்தனங்கள் எல்லை மீறி வருகிறது. யாரையும் நம்பி வீட்டுக்குள் விடக்கூடாது என்பதைப் போல உள்ளது சீரியலில் ஒளிபரப்பாகும் சீன்கள்.
இதில் பெரிய கொடுமை கர்ப்பிணி பெண்ணுக்கு விஷம் வைக்கச் சொல்வதும், பச்சைக் குழந்தையை கொலை செய்வது எப்படி என்றும் பாடமே நடத்த ஆரம்பித்து விட்டன டிவி சீரியல்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் வில்லி காயத்ரி செய்யும் வில்லத்தனங்கள் விபரீதமான போக்கை எட்டிப்பிடித்துள்ளது. அண்ணிக்கும், கொழுந்தனுக்கும் இடையே நடக்கும் சண்டையும் சவாலும்தான்.
எத்தனை நாளைக்குத்தான் இதையே காட்டுவது... அலுப்பு சலிப்பு ஏற்படுவதால் வில்லத்தனத்தின் உச்சத்தை காட்டுகிறது சீரியல்.
வில்லத்தனம் செய்து சிறைக்கு உள்ளே இருக்கும் காயத்ரி, தனக்கு துரோகம் செய்த குடும்பத்தின் நிம்மதியை குலைக்க அந்த வீட்டு மருமகளின் கர்ப்பத்தை கலைக்க செய்ய கொடுக்கும் திட்டம் பகீர் ரகமாக இருந்த நிலையில் அதிலிருந்து தாயும், சேயும் தப்பியதால் தன் தங்கை மூலம் தண்ணீரில் நனைத்த துண்டு ஒன்றை குழந்தையில் முகத்தில் போட்டு விட்டால் மூச்சுத்திணறி குழந்தை இறந்து விடும் என்றும் ஐடியா சொல்கிறாள்.
இப்படி பெரியவர்களை கொல்ல ஆரம்பித்த திட்டம் தற்போது குழந்தை வரை வந்து நிற்கிறது. இதற்கு சென்சார் போர்டு வைத்தால் தேவலை போல் இருக்கிறது. சீரியல்களின் டிஆர்பியை ஏற்ற இப்படியா செய்வது.