நார்வே:
அற்புத கலைஞனின் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்று நார்வே நாட்டை சேர்ந்த கவிஞர் ஒருவர் நா.முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெகுநீளமான அந்த மடலில்... கடந்த 7 வருடங்களாக நார்வேவில் தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறேன்.
இதில் மூன்று முறை "தமிழர் விருதினை" பெற்ற ஒரே கவிஞன் நா.முத்துக்குமார் தான். அவருடைய பெரும் ஆற்றலுக்காகவும், சிறந்த பாடல்களுக்காகவும் இந்த விருதினை வழங்கினோம். இப்போது அந்த கவிஞன் மறைந்து விட்டார் என்ற செய்தி என் உச்சந்தலையில் இடியாய் விழுந்தது.
அறிவுமதி அண்ணன் கவிதைக் காட்டில் பூத்துக் குலுங்கிய புதுக்கவிதை. புதுமைக் கவிஞர்களில் நா.முத்துக்குமார் அண்ணனும் ஒருவர். எந்நேரமும் என் மனதில் நிறைந்தவர் நா.முத்துக்குமார்.
அவருடன் பழகிய நாட்கள் குறைவு. ஆனால் அவர் பாடல்கள் வெளியாகும் போது அவருடன் தொலைபேசியில் பேசிய நாட்கள் நிறைவு. அவரின் பிரிவு இனம் புரியாத வலியோடு கூடிய எழுச்சியை தருகிறது என்று நீள்கிறது அவரின் அந்த வேதனை மடல்... தமிழர்கள் மட்டுமின்றி உலக கவிஞர்கள் மத்தியிலும் நா.முத்துக்குமாரின் மரணம் பெரும் வேதனை ஏற்படுத்தி உள்ளது.