400-வது படத்தில் நடித்து வரும் 'சௌக்கார்' ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் - இயக்குநர் ஆர்.கண்ணன்
சிவாஜி கணேசனுடன் நடித்த 'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதேபோல் ஜெமினி கணேசனுடன் நடித்த 'பாமா விஜயம்' மற்றும் 'பாக்கியலட்சுமி' படத்தில் 'மாலை பொழுதின் மயக்கத்திலே' என்ற பாடலில் கணவனை இழந்த இளம்பெண்ணின் உணர்வுகளை தனது நடிப்பால் வெளிப்படுத்திய விதம் இவரைக் குறிப்பிடும் படி அமைந்தது.
தனி நாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும், கிடைத்த வாய்ப்பை விடாமல் இரு நாயகிகளில் ஒருவர், குணசித்திர வேடங்கள் என்று எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தி விடுவார். முன்னணி நாயகர்கள் மட்டுமல்லாமல், அவர் காலத்தில் முன்னணி நாயகிகளாக இருந்த ஜெயலலிதா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, ஜெயந்தி, வாணிஸ்ரீ, ஆகியோருடனும், மனோரமா, சச்சு, போன்ற நகைச்சுவை நடிகைகளுடனும் நடித்திருக்கிறார்.
திரைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் வானொலியிலும், 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருக்கிறார். பல நாடகங்களில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும், பல படங்களில் பல வேடங்கள் ஏற்றிருந்தாலும், ரஜினிகாந்துடன் 'தில்லு முல்லு' படத்தில் இரட்டை பாத்திரத்தில் நடித்து நகைச்சுவையும் தனக்கு பொருந்தும் என்று நிரூபித்தார். அப்படம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டைக் குவித்தது. அதுமட்டுமல்லாமல், இவரின் நகைச்சுவை படத்திற்கும் பெரும் பலம் சேர்த்தது.
இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்திய 'சௌக்கார்' ஜானகி 'இரு கோடுகள்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது வென்றார். மேலும், ஃபிலிம்பேர் மற்றும் சைமா இரண்டிலும் வாழ்நாள் சாதனையாளர் விருது, எம்.ஜி.ஆர். விருது, நந்தி விருது ஆகியவையும் வென்றிருக்கிறார். இவர் கலை சேவையை கௌரவித்து தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியிருக்கிறது.
திரைத்துறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். கமலுடன் நடித்த 'ஹேராம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய 'சௌகார்' ஜானகி தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இது இவருக்கு 400-வது படமாகும்.
தனது இயக்கத்தில் 'சௌகார்' ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் கூறியதாவது:-
'சௌக்கார்' ஜானகி எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சவாலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அதேபோல் என் படத்திலும் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கிறார். நான் அவரின் கதாபாத்திரத்தைப் பற்றி கூறியதும் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
மிகப்பெரிய நடிகை 70 ஆண்டுகளாக பல பெரிய நாயகர்களுடன் நடித்திருந்தாலும், இந்த வயதிலும் நடிப்பின் மீதிருந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் சிறிதும் குறையவில்லை. மேலும், அவரிடம் எனக்கு வியப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திய விஷயம் அவருடைய நினைவு திறன் தான். இதுவரை 15 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அவருடைய பகுதி முடிவடைந்து விடும். 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இயக்குநர் ஆர்க.ண்ணன் கூறினார்.