ஹரீஷ் கல்யாண் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் பெல்லி சூப்புலு தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது
திருமணங்கள் நடந்தேறும் காலங்கள் அனைவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும். எல்லை தாண்டி சந்தோஷ கூச்சல்கள் கேட்கும். திருமண சங்கீதங்கள் எங்கும் ஒலிக்கும். குடும்பத்தில் எல்லோரும் இணையும் திருமணம் அத்தனை மகிழ்ச்சியானதாய் இருக்கும். நாம் இங்கு பேசுவது திருமணத்தை பற்றி அல்ல. திருமணத்தை மையமாக வைத்து காதலை கொண்டாடிய “பெல்லி சூப்புலு” தெலுங்கு படத்தின் தமிழ்பதிப்பை பற்றி. விஜய் தேவரகொண்டா நடிப்பில் சக்கை போடு போட்ட “பெல்லி சூப்புலு” திரைப்படம் நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் உருவாகிவருகிறது. தமிழில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றாக முடிக்கப்பட்டு, தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.
தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா படம் பற்றி கூறியதாவது...
தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. 2020 பிப்ரவரி 7 படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். தமிழில் வெகு நிறைவான படைப்பாக படம் உருவாகி வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுந்தர் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார். பின்வரும் காலங்களில் அவர் தயாரிப்பாளர்களின் செல்வமாக விளங்குவார். மிகப்பெரும் வெற்றியடைந்து, எல்லைகள் தாண்டி பேசப்பட்ட ஒரு படத்தை, ரீமேக் செய்வதென்பது அத்தனை எளிதல்ல. அதுவும் கலாச்சாரத்துடன் தமிழ் மொழியின் தன்மை மாறமல், வாழ்வியல் தன்மைகள் வெளிப்பபடும்படி திரைக்கதை அமைக்க பெரும் திறமை வேண்டும். அதில் அவர் வித்தகராக இருக்கிறார். இப்படம் கதாப்பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளை மையமாக கொண்ட படம். அசல் பதிப்பின் ஆத்மா எந்த விதத்திலும் சிதைந்து விடாமல் ஹரிஷ் கல்யாணும், ப்ரியா பவானி சங்கரும் தங்கள் கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக உயிர்ப்பித்துள்ளார்கள். எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகள் பெரிய உற்சாகத்தை தந்தது. படத்தை முழுதாக பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்றார்.
A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் கொரேனா சத்யநாரயணா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொள்கிறது. Production No 2 என தற்போது அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். 2020 கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.