நியூயார்க்:
தன் உயிரை பணயம் வைத்து துப்பாக்கிச் சூட்டில் 70 பேரை காப்பாற்றியது இந்திய வம்சாவளி மாஜி கடற்படை வீரர் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் புகுந்த ஓமர் மதீன் (29) என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக்கொன்றான். மேலும் இத்தாக்குதலில் 53 பேர் காயம் அடைந்தனர்.
ஆனால் இந்த தாக்குதலின் போது கேளிக்கை விடுதிக்குள் சிக்கிய 70 பேரின் உயிரை ஒரு வாலிபர் தைரியமாக செயல்பட்டு காப்பாற்றினார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அவரது பெயர் இம்ரான் யூசுப் (24). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடற்படையின் முன்னாள் வீரர்.
இவர் துப்பாக்கி சூடு நடந்த விடுதியில் காவலாளியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று வெளியே இவர் பணியில் இருந்தார். அப்போது விடுதிக்குள் 4 தடவைக்கு மேல் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அச்சமடைந்து ஓடி வந்த அவர் உடனே பின்புற கதவை திறந்து விட்டார். பின்னர் ஒருவர் பின் ஒருவராக 70 பேரை வெளியேற்றி அவர்களின் உயிரை காப்பாற்றி உள்ளார். இதற்கு இவர் எடுத்த ராணுவ பயிற்சிகள் உதவி புரிந்துள்ளது.
அவர் மட்டும் அன்று இல்லையென்றால் உயிரிழப்புகள் 100-ஐ தாண்டியிருக்கும. தனது உயிரை பணயம் வைத்து வீரதீரத்துடன் புத்திசாலி தனமாக செயல்பட்ட இம்ரான் யூசுப்பை பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாராட்டினர்.
இம்ரான் யூசுப்பின் குடும்பம் 4 தலைமுறைக்கு முன்பே இந்தியாவில் இருந்து கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.