சென்னை:
உடல்நிலை சரியில்லைங்க... இல்லியே... தினமும் டிவியில் பார்க்கிறேனே... கேள்வியை நான்தான் கேட்கணும் நீங்க இல்ல... நீதிபதி வைத்த "குட்டு" யாருக்கு தெரியுங்களா? தந்தி டிவியில் எதிரில் இருப்பவரை பேசவே விடாமல் தானே பேசி கேள்வியும் கேட்பாரா? அதாங்க தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டேவுக்குதான்.
தமிழகத்தின் முகவரியான "தந்தை பெரியாரை" அவமதிப்பு செய்ததாக தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே மீது திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ரங்கராஜ் பாண்டே காலம் கடத்தி வந்தார். இதனால், பாண்டேவுக்கு "பிடிவாரண்ட்" பிறக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததத. இதையடுத்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் பாண்டே.
அப்புறம்தாங்க ஆரம்பித்தது பாண்டேவுக்கு கொட்டு. அவரை பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி இதுதான். “சட்டத்தை மதிக்க வேண்டும் என்று டிவியில் அறிவுரை கூறும் நீங்கள் கடந்த 6 வாய்தாக்கள் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே" என்றாரே பாருங்கள்.
இதற்கு அசராமல் "ஐய்யா.... எனக்கு உடல்நிலை சரியில்லை" என்று ஒன்றாம் வகுப்பு மாணவன் போல் பாண்டே பட்டுன்னு பதில் சொல்ல, உடனே நீதிபதி, "உங்களைத் தான் நான் தினமும் டிவியிலே பார்க்கிறேனே" என்று அதிரடிக்க தடுமாறிப்போனார் ரங்கராஜ் பாண்டே.
பின்பு, "அடுத்த விசாரணையின் போது உங்களது எம்டி பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதைக் கேட்டு சட்டென்று "ஷாக்கான" பாண்டே, "ஐயா.. அவரு எந்த தவறுமே செய்யவில்லை" என்றவர், "எனக்கு வீரமணி அய்யாவையும், சுபவீ அண்ணனையும் கூட நல்லாவே தெரியும்" என்று டிவியில் பேசுவது போலவே பாண்டே அடுக்க, "இது நீதிமன்றம், இங்கு கேள்வி நான் தான் கேட்க வேண்டும்" என நீதிபதி வைத்தார் ஒரு குட்டு பாண்டேவின் பேச்சுக்கு... அப்புறம் என்ன பாண்டே தன் வாய்க்கு போட்டார் பிளாஸ்திரி... அதாங்க கப்சிப் ஆகிவிட்டார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.