சென்னை:
சென்னையில் நடந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தற்போது அதை அரசியல் கட்சிகளும் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பெண் என்ஜினியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொலை செய்யப்பட்ட ஸ்வாதி
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்பாட்டத்திற்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை தமிழக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியது; தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. சுவாதி படுகொலையை மட்டுமல்ல. சென்னை நகரில் கடந்த 1 மாதத்தில் 16 கொலைகள் நடந்துள்ளது. ஆனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் கூறுகிறார்.
இது அமைதிப்பூங்காவா? அல்லது ரத்தக்காடா? என்று மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். சுவாதியின் வீட்டுக்கு சென்று கூட ஆறுதல் சொல்ல முடியவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தணும். பெண்கள் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
சென்னையில் கூலிப்படை, ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கி மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கைக்கு அரசு உதவவேண்டும் என்று தமிழக அரசை கடுமையா சாடினார்.