நட்பாக பேசினார்... பழகினார்.... காதலிக்க மறுத்தார்... கெஞ்சினேன்... உதாசீனப்படுத்தினார்... ஆத்திரத்தில் வெட்டினேன் கொலையாளி ராம்குமார் தனிப்படை போலீசாரிடம் ஒப்புதல்

Sekar Chandra
நெல்லை:
நட்பாக பேசினார்... காதலிக்க மறுத்தார்... ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொன்றேன் என்று ராம்குமார் தனிப்படை போலீசில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை உலுக்கி வந்த சுவாதி கொலை வழக்கில் கொலையாளி ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்த போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ராம்குமாருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 


பின்னர் ராம்குமாரிடம் தனிப்படை போலீசார் மெதுவாக பேச்சு கொடுத்து நடந்த விபரங்கள் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராம்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளதாவது:


‘நெல்லை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தேன். ஆனால் முழுமையாக படிப்பை முடிக்கவில்லை. பின்னர் சென்னை சூளைமேட்டில் தங்கி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது. 


வேலைக்கு நடந்து செல்லும் நேரத்தில்தான் சுவாதியும் வேலைக்கு புறப்பட்டு வருவார். அப்போது இருவரும் பேசிக் கொள்வோம். இருவருக்கும் 4 மாதங்களாக பழக்கம். அவரிடம் நான் என்ஜினீயரிங் பட்டதாரி என்று அறிமுகமாகி பழகி வந்தேன்.


இந்த பழக்கத்தில் நான் அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். இதற்கிடையில் நான் என்ஜினீயரிங் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. ஜவுளிக்கடையில் வேலை செய்கிறேன் என்பது எப்படியோ சுவாதிக்கு தெரிந்து விட்டது. 


அதன்பிறகு சுவாதி என்னிடம் பேசுவதை தவிர்த்தார். எனக்கு மனசு பொறுக்கவில்லை. சுவாதியிடம் சென்று என் மனதில் இருந்த காதலை வெளிப்படுத்தினேன். ஆனால் அவர் என்னை உதாசீனப்படுத்தினார். அப்புறம் என்னை சந்திக்க அவர் விரும்பவில்லை.


இந்நிலையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. காலையில் அவர் நடந்து வருவது இல்லை. அவரது தந்தை ரயில்யி நிலையத்திற்கு வண்டியில் அழைத்து வந்து விட்டதால் என்னால் அவரை சந்தித்து பேச முடியவில்லை.


எனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று 2 முறை அவரிடம் பேசினேன். அப்போது எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி சுவாதியிடம் கெஞ்சினேன். ஆனால் அவர் ‘உனக்கும், எனக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. ஏன் என் பின்னாடி சுற்றுகிறாய்’ எனக்கூறி என்னை திட்டினார்.


அவரது உதாசீனமும், அவர் இப்படி பேசியதும் எனக்கு சுவாதி மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். எனது பேக்கில் புத்தகங்களுடன் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு 2 நாட்களாக சுவாதியை பின் தொடர்ந்தேன்.


24-ந் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி ரயிலுக்கு காத்திருந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். இதனால் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன்’ என்று தனிப்படை போலீசாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


நான்கு மாதம் பழக்கத்திலேயே காதல் வந்தது... அவர் ஏற்றுக்கொள்ளாததால் கொலை செய்தேன் என்று ராம்குமார் கூறியது உண்மையா? அல்லது வேறு காரணங்களுக்காக சுவாதியை கொலை செய்து விட்டு இப்படி நாடகமாடுகிறாரா? இவருக்கு உதவியாக இருந்தது யார்? கொலை செய்த பின்னர் அவர் எங்கு தங்கினார் என்பது குறித்து மேல் விசாரணையில்தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில் ராம்குமாரை சென்னை அழைத்து வர போலீசார் ஏற்பாடுகள் செய்வதாக தெரிகிறது. கொலை செய்ததற்கு மறுநாள்தான் ராம்குமார் சென்னையிலிருந்து தப்பி சென்றுள்ளான். அதுமட்டுமின்றி கொலை செய்தபின்னர் எதுவுமே நடக்காதது போல் நடந்து சென்ற வீடியோ அனைவரும் பார்த்த ஒன்றுதான். அப்படி என்றால் கொலை செய்வது என்ற முடிவுடன்தான் ராம்குமார் வந்துள்ளார். அதனால்தான் தப்பிப்பது முதல்கொண்டு முன்னரே திட்டமிட்டுள்ளான் என்று போலீசார் கருதுகின்றனர்.

ராம்குமார்


Find Out More:

Related Articles: