மரத்து போன மனிதாபிமானம்... விபத்தில் சிக்கிய 3 பேர் பலி

Sekar Tamil
சேலம்:
மரத்து போய்விட்டது மனிதாபிமானம் என்பதைதான் இந்த சம்பவம் நினைவுப்படுத்தி உள்ளது. அந்த சம்பவம் இதோ!


வாழப்பாடி அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்களை காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் பொதுமக்கள் செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் 3 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம்தான் அது.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை புதுக்காடை பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (24) இவர் தனது நண்பர் வெங்கடேசுடன் பைக்கில் பேளூர் நோக்கி சென்றார்.


ஏரிகோழிக்கரையில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது பயங்கரமாக மோதி விட்டார். இதில 2 பைக்கிலும் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ் அந்த இடத்திலேயே பலியானார். மற்ற மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.


விபத்தை பார்த்து ஓடிவந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் செய்த செயல்தான் பெரும் அவமானகரமானதாக மாறி உள்ளது. மரத்து போய் விட்டதோ மனிதாபிமானம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. 


 
விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை யாரும் மருத்துவமனையில் சேர்க்கவோ, ஆம்புலன்சுக்கு தகவலோ கொடுக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை செல்போனில் புகைபடம் எடுத்து கொண்டிருந்தனர்.


இதற்கிடையே எப்படியோ தகவலறிந்து அரை மணி நேரத்திற்கு பின்னர் அங்கு வந்த போலீசார்  மோட்டார் சைக்கிள்களுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், மைக்கேல்ராஜ் (21), சத்தியராஜ் (21) ஆகிய 3 வாலிபர்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


இதில் மைக்கேல்ராஜ், சத்யராஜ் ஆகிய 2 பேரும் இறந்தனர். வெங்கடேஷ் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். உரிய நேரத்தில் ஆம்புலன்சிற்கு மக்கள் யாராவது போன் செய்திருந்தால் நிச்சயமாக அவர்களை காப்பாற்றியிருக்க முடியும். இவர்களை என்னவென்று சொல்வது.


Find Out More:

Related Articles: