வேக போதையில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்... சாலை விபத்துகளில் வாழ்வை தொலைக்கும் அவலம்...

Sekar Tamil
சென்னை:
வேகம்... வேகம்... இது வேதனையின் உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் போதை என்பதை நம் இளைஞர்கள் மறந்து விடுகின்றனர். வேகம் மட்டுமின்றி போதையும் உயிர் காவு வாங்கும் என்பதையும் இளம் ரத்தத்தினர் மறந்து விடுகின்றனர்.


நடந்து சென்ற காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாற சைக்கிள் வந்தது. பின்னர் இயந்திர காலத்திற்கு தாவ ஆரம்பித்தோம். மொபட், பைக் என வேகத்திற்கு உச்சம் எடுக்க ஆரம்பித்தோம். விளைவு... இதுவரை யாரும் அறிந்திடாத அளவிற்கு விபத்துக்களை சந்திக்கிறோம். சாலை விபத்துக்கள். இதுதான் பல குடும்பங்களின் அஸ்திவாரத்தை, ஆணி வேரை பதம் பார்த்து வருகின்றன. 


இளம் தலைமுறையினர் என்று மட்டுமில்லை. வேகமான வாகன இயக்கத்தால் பல விபத்துக்கள். கொத்து கொத்தாக மக்கள் இறக்கும் சம்பவங்கள்... கண்ணீரையும், கவலையையும் ஏற்படுத்துகின்றன. தற்போது இளம் தலைமுறையினர் இயக்கும் 2 சக்கர வாகனங்களின் இயக்கும் வேகம் அதிகளவு உள்ளது. வெளிநாட்டு பைக்குகள் தற்போது சர்வ சாதாரணமாக இந்தியாவில் பறக்கின்றன. அந்த பைக்குகளின் வேகத்திற்கு ஏற்ப நம்ம ஊரு சாலைகள் உள்ளதா? சிக்னல்களை சரியாக கவனித்து வாகனங்கள் ஓட்டுகின்றனரா? இல்லையே...



இல்லையே... மகனின் ஆசைக்காக பணத்தை கொட்டி கொடுத்து வாங்கி கொடுத்த வாகனமே அவனின் இறுதிப்பயணத்தை காட்டினால் எந்த பெற்றோரால்தான் தாங்கிக் கொள்ள இயலும். 


இந்த விபத்துக்கள் தமிழகத்தில் அதிகளவில் நடக்கின்றன. கடந்த 2014ம் வருடத்தில் சாலைவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இங்குதான் அதிகம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. காலையில் பணிக்கு செல்ல அவசரம் காட்டுபவர்கள் சாலைவிதிகளை மறக்கின்றனர். விதி அவர்களை மிதித்துவிடுகிறது. குடும்பத்தினரை மனதில் நிறுத்தி வாகனம் ஓட்டினால் விபத்துக்கள் குறையும் என்பது நம் நம்பிக்கை.


சாலைகளின் தரம் என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை சரியில்லாத ஒன்றுதான் என்பது அனைவரும் அறிந்த வெட்கக்கேடான ஒன்று. தற்போது இளைஞர்களின் வாகனங்களின் இன்ஜின் வேகம் சாதாரணமானது அல்ல. 60சிசி வாகனங்கள் இன்று போன இடம் தெரியாமல் போய் விட்டது. குறைந்தஅளவு வாகனங்களே இப்படி உள்ளன. இந்தகால தலைமுறைக்கு இந்த வாகனங்கள் சைக்கிள் போல்தான். 100சிசி... அதற்கு மேல் உள்ள வாகனங்களையே அவர்கள் தூசி போல் பார்க்கின்றனர். 


வேகம்.. வேகம்.. வாகனத்தை வீலிங் செய்வது என்று இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் அவர்களை மட்டுமின்றி சாலைகளில் செல்லும் மற்றவர்களையும் பதம் பார்த்து பல நேரங்களில் உயிரையும் பறிக்கும் சம்பவங்கள் நடந்தேறுகிறது. இதில் சென்னை நகரம் மிகவும் கொடுமைகளை சந்தித்து வருகிறது. இக்கால இளைஞர்களிடம் போதை போல் பரவி வரும் ஒரு விஷயம் பைக் ரேஸ். வேகம்.. வேகம்.. வேகம்.. வேகம்தான் டிராபிக் நிறைந்த சாலைகளில் மிரட்டும் வேகத்தில் செல்லும் இந்த இளைஞர்கள் சாலைவிதிகளை கவனிப்பதும் இல்லை. அதை மதிப்பதும் இல்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. இது அவர்களின் உயிரையும் பறித்து சாலையில் செல்லும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் பலி வாங்கி விடுகிறது.


இப்படி இரு சக்கர வாகனங்கள் ஒருபுறம் வேகம் காட்டுகிறது என்றால் பெரிய வாகனங்கள் ஓட்டுபவர்கள் போதைக்கு அடிமையாகி சாலைகளில் தறிக்கெட்டு போய் பிற வாகனங்களில் மோதி அவர்களையும் பலி வாங்குகின்றனர். கண்விழித்து ஓட்டும் டிரைவர்கள் அசந்து தூங்கி விபத்துக்களை ஏற்படுத்துவதும் நடந்து வருகிறது. சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.



அதேபோல் சட்டத்தின் பிடியை இறுக்கி பிடிக்க செய்தால் பைக் ரேஸ் மற்றும் வேக போதையில் சிக்கியுள்ள இளைஞர்களையும் காப்பாற்ற இயலும். யோசிப்போம்... விபத்துக்களை தவிர்ப்போம்... வீட்டினரையும், நாட்டினரையும் காப்போம்...


Find Out More:

Related Articles: