பூத்த புத்தம் புது மலர்கள்... புளி மூட்டைகளாக திணிக்கப்படும் அவலம்

Sekar Tamil
திருச்சி:
பாங்க்... பாங்க்... சட்டென்று வளைந்து... சின்ன கேப்பில் அதிரடியாக நுழைந்து சர்ரென்று நம்மை கடக்கும் ஆட்டோக்களை கண்டு நாம் கண்டிப்பாக திட்டி இருப்போம்... 


ஏய்... பார்த்துப்போ... நம் திட்டுக்கூட அந்த ஆட்டோ டிரைவர் காதில் விழுந்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காலையில் பள்ளி நேரத்திலும்... மாலையில் பள்ளி முடியும் நேரத்திலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கும்.


காரணம்... பள்ளிக்குழந்தைகளை சுமந்து கொண்டு செல்லும் ஆட்டோக்கள். இதில்தான் இந்த சிறப்பு கட்டுரைக்கான விஷயம் அடங்கி உள்ளது. ஒரு ஆட்டோவில் இத்தனை குழந்தைகளைதான் ஏற்ற வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் புளி மூட்டைகளை அடைத்து செல்வதுபோல் குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோக்கள்தான் அதிகம்.


பெற்றோருக்கு இது தெரியாதா? தெரியும்... வேறு வழி... நடுத்தர குடும்பத்தினர்தான் இப்படி ஆட்டோக்களை நம்பி உள்ளனர். குறைந்த வாடகை. பள்ளி கட்டணமே அதிகளவில் இருப்பதால் ஆட்டோதான் அவர்களுக்கு கிடைத்துள்ள எளிமையான வாகனமாக உள்ளது. இதனால் குழந்தைகள் நெருக்கடியில் சென்றாலும் அவர்கள் ஒன்றும் சொல்ல முடியாத நிலை. 


ஆனால் ஆட்டோ டிரைவர்கள் செய்வதுதான் வேதனை. ஒரு ஆட்டோவில் அதிகபட்சம் 10 குழந்தைகள் ஏற்றலாம் என்றால் இவர்கள் 20 முதல் 25 குழந்தைகள் வரையில் ஏற்றுகின்றனர். இதனால் பூத்த புத்தம் புது மலராக அம்மா...டாட்டா... அப்பா... டாட்டா... பள்ளி நேரங்களில் வீட்டை விட்டு புறப்படும் அந்த மழலைகள்... கசங்கிய... வாடிய மலராக பள்ளியில் போய் இறங்கும் நிலைதான்.


இதில் பெரிய வகுப்பு குழந்தைகள் முதல் சிறிய வகுப்பு குழந்தைகள் வரை அனைவருக்கும் ஒரே நிலைதான். சின்ன சைஸ் ஆட்டோவில் 6 குழந்தைகள் உட்காரலாம் என்றால் அதிலேயே 12 குழந்தைகளை ஏற்றுகின்றனர். இதில் இவர்கள் பறக்கும் வேகம் இருக்கிறதே... நமக்கு கண்ணை கட்டி விடுகிறது. இதில் பள்ளி அமைந்திருக்கும் இடம், வீடு இருக்கும் இடத்தை பொறுத்து வாடகை மாறுபடும். குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது ஆட்டோவிற்கு கண்டிப்பாக வாடகையாகிவிடும். அப்போ... 25 குழந்தைகளை ஏற்றினால்...


பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் சரியாக 5 குழந்தைகள் என்றால் அதற்கு மேல் ஏற்றாத சூப்பர் டிரைவர்களும் உள்ளனர். இவர்கள் போல் உள்ளவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இருப்பினும் மனம் திருப்தி அடைகிறது. 100க்கு 90 ஆட்டோ டிரைவர்களுக்கு குழந்தைகள் புளிமூட்டைகள் போல்தான்... அதிலும் மாலையில் திரும்பும்போது குழந்தைகள் படும்பாடு சொல்லி மாளாது. சில நேரங்களில் வயதில் பெரிய மாணவர்கள் மடியில்தான் சின்ன வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து வரவேண்டி இருக்கும். 


இந்த நிலை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும்... தெரிந்தும் என்ன செய்வது... இன்று வரை இந்த நிலைதான் நீடித்து வருகிறது. மக்களின் பொருளாதாரம் வளராத நிலையில் பள்ளிக்கூடங்கள் கல்விக்கு எப்போது நியாயமான கட்டணத்தை நியமிக்கிறதோ... அப்போதுதான் இந்த பிரச்னைக்கு ஒரு ஏற்படும் என்கின்றனர். அப்போதாவது தீர்வு ஏற்படுமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.


இதற்கு நிரந்தர தீர்வு அரசின் கரங்களின்தான் உள்ளது. குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனம் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்....


Find Out More:

Related Articles: