புதுடில்லி:
மழை அதிகம் பெய்யும் நேரத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து தவளைகள் கத்தி... பசியுடன் இருக்கும் பாம்புகளுக்கு இரையாகும். அப்படிதான் அட்வைஸ் என்ற பேரில் சுற்றுலாப்பயணிகளை எரிச்சல்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் ஒருவர்.
என்ன விஷயம் தெரியுங்களா? இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குட்டைப் பாவடை அணியாதீர்கள் என்று மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா அறிவுறுத்திய சம்பவம்தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
தாஜ் மஹாலை பார்வையிட ஆக்ராவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சுற்றுலாத்துறை மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதது என்று ஒரு லிஸ்ட் போட்டுள்ளார்.
சிறிய நகரங்களில் தங்கும்போது, இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். குட்டைப் பாவடை போன்ற உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
டாக்சியில் பயணம் செய்தால் அந்த வாகனத்தை செல்போனில் படம்பிடித்து தனது நண்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குறிப்புகள் அவர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் வரவேற்பு அட்டையில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் சொல்ல... இப்போது அதுதான் சர்ச்சையாகி உள்ளது.
இதுகுறித்து, அரசியல் தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளியிட்டு வருகின்றனர். சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்கு தேவையானதை செய்யாமல் இதுபோன்று செய்வது சரியா என்று விமர்சித்து வருகின்றனர்.