சென்னை:
சக்ஸஸ் திட்டங்களான அம்மா உணவகம், அம்மா மருந்தகத்தை அடுத்து அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏழைகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளதாவது:
ஏழை, எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகைக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பயன் பெறும் வகையில் 'அம்மா திருமண மண்டபங்கள்' கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மண்டபங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒப்பனை அறை, மணமகன் மற்றும் மணமகளுக்கான தனி அறைகள், விருந்தினர்களுக்கான அறைகள், விருந்து உண்ணும் அறை, சமையல் கூடம் என அனைத்து வசதிகளும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த திட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை மூலம் செயல்படுத்தப்படும்.
தண்டையார்பேட்டை, வேளச்சேரி, அயப்பாக்கம், பருத்திப்பட்டு, பெரியார் நகர், கொரட்டூர், மதுரை மாவட்டத்தில் அங்ணாநகர், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுங்கையூர், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆகிய 11 இடங்களில் 83 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.