பட்டறை... பட்டறை... வெங்காயத்திற்கு போடும் பட்டறை... பழமை முறையில் பெரம்பலூர் விவசாயிகள் அசத்தலோ... அசத்தல்..

Sekar Tamil
திருச்சி:
எம்புட்டு உரித்தாலும்... தோலானாலும்... இதன் சிறப்பு... சிறப்போ... சிறப்பு. உரிக்க கண்கள் எரிய... அதிலும் ஒரு நன்மையை கொடுக்கும். ஏழையானாலும் சரி... பணக்காரர் ஆனாலும் சரி... நன்மை ஒரே மாதிரிதான். உச்சிக்கு போனாலும் அனைவரையும் கலங்க வைக்கும்... இறங்கி வந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி... கொண்டாட்டம்தான்.


அது... வேற என்ன வெங்காயம்... சின்ன வெங்காயம்... சீண்டிப்பார்க்கும் விலையேற்றத்தின் போது... சிரிக்க வைக்கும் விலை குறையும் போது. அரசியலிலும் வெங்காயத்தின் பங்கு அதிகமோ அதிகம்தான். அதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இதன் பயன்கள் பெரிசோ... பெரிசு...


வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதனால் நம் உடம்புக்கு ஊட்டச்சத்தை அள்ளித்தருகிறது.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருள்தான். நம்ம ஊரு பாட்டி வைத்தியத்தில் முதல் இடம் பெறுவது வெங்காயம்தான்.


இயற்கை நமக்கு கொடுத்த டாக்டர் என்று கூட சொல்லலாம். ஊசி போடாமலேயே கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்தை பாராட்டாத விஞ்ஞானிகளே இல்லை. 


இதை எப்படி பயன்படுத்தினால் என்ன பயன்களை நாம் பெறலாம். தெரிஞ்சுக்குவோம். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் பட்டுன்னு குறையும், பித்த ஏப்பம் சட்டுன்னு மறையும். இதை செய்து பார்த்தால் புரியும் உண்மை என்று. 


வெங்காயச் சாறை சமஅளவு எடுத்துக்கிட்டு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில் விட்டால் காதுவலி காத தூரத்திற்கு ஓடியே போய்விடும். 


வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
இதனால் எதற்கெடுத்தாலும் சிடுசிடுக்கும் முகம் மறையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். இப்படி பட்டியல் போட்டால் நீளும்...  நீளும்... நீண்டுக் கொண்டே செல்லும்.


சரி இது பயன்கள். சாதனை... இருக்கே... சின்ன வெங்காய உற்பத்தியில் வறண்ட மாவட்டமான பெரம்பலூர் செம சாதனை செய்து வருகிறது. காரணம் உழைப்பில் சளைக்காத விவசாயிகளின் முயற்சியே... முயற்சியே! என்றுதான் சொல்ல வேண்டும்.


சற்று ஈரம் பட்டால் அவ்வளவுதான் வெங்காயம் அழுகி வீணாகிவிடும் என்பதான் உண்மையிலும் உண்மை. ஆறுகள் என்பதை பெயரளவில் மட்டுமே கொண்ட பெரம்பலூரில் வெங்காயத்தின் விளைச்சல் அமோகமோ அமோகம்!


பெயருக்குதான் ஆற்றுப்பாசனம். ஆனால் பெரம்பலூரில் கிணற்றுப்பாசனத்தை மட்டுமே முழுமையாக விவசாயிகள் நம்பி உள்ளனர். இதுதான் சாகுபடிக்கு முக்கியமான நீர் ஆதாரம் ஆகும். 


இங்கு நவீன தொழிற் நுட்பங்கள் நுழையாத காலம் தொட்டே, சின்ன வெங்காய உற்பத்தியை ஆச்சரியப்படும் வகையில் விவசாயிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். 


பெரம்பலூர் மாவட்டத்தில் மாசிப்பட்டம், வைகாசிப்பட்டம் என்று அனைத்து காலத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பெரம்பலூர்தான் முன்னிலை... முன்னிலை என்றால் நம்புங்கள். நம்பித்தான் ஆக வேண்டும். 


வெங்காயம் சற்று ஈரப்பதம் ஆனால் அவ்வளவுதான். ஆனால் இவ்வளவு விளையும் வெங்காயத்தை பாதுகாக்க வேண்டுமே என்ன செய்வது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் வெங்காய சேமிப்பு குளிர் பதன கிடங்கு பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் அருகே அமைக்க ஏற்பாடுகள் நடக்க... மும்முனை மின்சாரம் இல்லாததால் காத்துக்கிடக்கிறது. காத்துதான் கிடக்கிறது.


ஆனால் நாங்கள் இதெற்கெல்லாம் சளைத்தவர்கள் இல்லை என்று விவசாயிகள் களம் இறங்க... அட்டகாசமாக இப்போதும் பெரம்பலூர்தான் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. எப்படி அந்த காலத்தில் விவசாய முன்னோர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு முறையை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். 


அது என்ன முயற்சி என்கிறீர்களா? பட்டறை அமைத்து பாதுகாக்கும் முறைதான். வெங்காயம் அறுவனை செய்த வயலிலேயே குறிப்பிட்ட அளவில் கருங்கல் அமைப்பு உருவாக்கி, அதன்மேல் பந்தல் போல மரக்கழிகளை வைத்து தென்னங்கீற்றுகளை பரப்புகின்றனர் விவசாயிகள். அட குடில்போல என்று நினைக்காதீர்கள் இதில்தான் இருக்கு பட்டறையின்... பட்டறை மேட்டர்.


இதில் வெங்காயம் உட்புறமாகவும், மற்ற பகுதிகள் வெளிப்புறமாகவும்ட இருக்கும்படி அடுக்குகின்றனர். இப்படி 3 அடி உயரத்திற்கு அடுக்கப்படும் இவற்றைதான் பட்டறை என்று அழைக்கின்றனர். மழைநீர் படாதபடி இந்த பட்டறையை தென்னங்கீற்றை வைத்து பரப்பி வைக்கின்றனர்.


இந்த பட்டறைதான் சின்ன வெங்காயத்தின் "வீடாக" அமைகிறது.  இதில் 3 அல்லது 4 மாதங்களுக்கு சின்ன வெங்காயம் பத்திரமாக இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா... நம்புங்கள். முன்னோர்களின் ஒவ்வொரு செயலும் தொலைநோக்குடன் அமைந்ததுதான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


இந்த பட்டறையை விவசாயிகள் கவனித்துக் கொண்டே இருப்பாங்க... வெப்பம் அதிகமான இருந்தால் பட்டறை சிறிது பிரித்து உலர்த்திவிட்டு மீண்டும் பட்டறையை கட்டுவார்கள். இப்படி பட்டறை போட்டு பாதுகாக்கப்படும் வெங்காயத்தில் 2 மாதத்திற்கு மேல் உள்ளவற்றை விதைக்காக எடுத்து விற்பனை செய்கின்றனர்.


இது ஒருபுறம் என்றால் மாப்பிள்ளைக்கு பெண் பார்ப்பது போல் பெரம்பலூருக்கு வந்து குவிகின்றனர் விவசாயிகள். திண்டுக்கல், கோயம்பேடு, திருச்சி காந்தி மார்க்கெட் என பல பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் விவசாயிகளிடம் விலை பேசி வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.


ஒரு சில வியாபாரிகள்... விளைச்சலுக்கு முன்பே விவசாயிகளுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்து அறுவடைக்கு பின்னர் விலை பேசி வாங்கி செல்வதும் உண்டு. இப்படி உரித்தால் கண்ணீர் வரவைக்கும் வெங்காயம்... பெரம்பலூரில் மட்டும் பட்டறையை பிரித்தால் பணத்தை கொட்ட செய்கிறது.


இப்ப சொல்லுங்க... இனிமே யாரையாவது வெங்காயம் என்று திட்டுவீர்களா?


Find Out More:

Related Articles: