புதுடில்லி:
வரலையா... வரலையா... அப்ப உங்களுக்கு அபராதம்தான் என்று டில்லி கோர்ட் அதிரடி காட்ட சிபிஐ அதிர்ந்து போய் உள்ளது.
என்ன விஷயம் என்றால்... கடற்படை ரகசியங்கள் திருட்டு தொடர்பான வழக்கில் சாட்சியை விசாரிக்க வக்கீல் ஆஜராகாததால் சி.பி.ஐ.,க்கு டில்லி கோர்ட் 5,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ரகசிய ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கு 2006ல் பதிவானது. இதன் விசாரணை, டில்லி சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கின் சாட்சி நேற்று ஆஜரானார்.
ஆனால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ., வக்கீல் ராஜிவ்மோகன் வரவில்லை. 'விசாரணை நடக்காமல், இந்த வழக்கில், கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, சி.பி.ஐ.,க்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என்று கோர்ட் அதிரடித்தது.
இதற்கிடையே, 'இந்த வழக்கில், சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து ஆஜராக விரும்பவில்லை' என்று வக்கீல் ராஜிவ்மோகன் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் புதிய வக்கீலை நியமிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.