பீஜிங்:
சீனா, தைவானை தாக்கிய புயலால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட 41 பேரில் 15 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு மெகி என்று பெயரிடப்பட்டு இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயல் சீனா மற்றும் தைவானை புரட்டி போட்டு விட்டது என்றே கூற வேண்டும். 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறை காற்று வீசியதுடன் பலத்த மழை கொட்டியது.
இதனால் தைவான் நாட்டில் உள்ள ஹாலியன் கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மரங்கள் சாய்ந்தன. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த மழைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து உள்ளனர். இந்நிலையில் கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 41 பேர் இடிபாடுகளில் சிக்கி கொள்ள, அதில் 15 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை காப்பாற்ற மிகுந்த சிரமத்திற்கு இடையில் பணிகள் நடந்து வருகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.