முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 12ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக சார்பில் கங்கை அமரன் வேட்பாளராக நிற்கிறார். இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
டிடிவி தினகரன் தொப்பியை தலையில் அணிந்த படியே வலம் வருகிறார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நடந்தே சென்று வீடுவீடாக வாக்கு சேகரித்து வருகிறார். ஓபிஎஸ் தரப்பும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே நகர் பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் காசி மேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருந்தார்.
அப்போது தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கட்சி கொடியுடன் படகில் ஏறி கடலுக்குச் சென்றனர். ஆனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் எல்லாம் ஊருக்குள் திரும்பிவிட்ட தகவல் தெரியாததால், கடலில் நிற்கும் படகுகளை பார்த்து கையசைத்தபடி நூதன முறையில் வாக்கு சேகரித்தனர். சுமார் 2 மணிநேரம் நூதன முறையில் வாக்கு சேகரித்த சம்பவம் அரங்கேரியது.