மூன்றடியில் ஆரம்பித்து 7 அடி வரை விதவிதமான பிள்ளையார்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லா "சாக்"பவுடர், தேங்காய் நாரில் உருவாக்கம்

Sekar Tamil
தஞ்சாவூர்:
வரும் 5ம் தேதி பக்தர்கள் எதிர்பார்க்கும் நாள்... இந்தியா முழுவதும் என்று வருவார்... அவர் என்று வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். யார் என்று கேட்கிறீர்களா? வேறு யாருங்க... அனைவருக்கும் வரங்களை அள்ளித்தரும் முழு முதல் கடவுள் விநாயகர்தான்.


ஆம். செப்.5ம் தேதி விநாயகர் சதுர்த்தி. அதற்காக உருவாகி வருகிறது சின்ன சைஸ் விநாயகரில் இருந்து பெரிய சைஸ் விநாயகர் வரை. விநாயகர் சதுர்த்தியை தமிழகத்தில் மட்டுமின்றி மும்பை உட்பட வட இந்திய மாநிலங்களிலும் கனஜோராக கொண்டாடி தீர்ப்பது பக்தர்களின் வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு அடியில் இருந்து 10 அடி... அதற்கு மேல் என்று பிரமாண்ட விநாயகர் சிலைகள் இதற்காகவே தயாராகி பக்தர்கள் விருப்பப்படி ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு பிறகு நீர்நிலைகளில்... அது ஆறு... அல்லது கடல்... ஏரி ஆகியவற்றில் விசர்ஜனம் செய்யப்படும். இதற்காக பல மாநிலங்களிலும் விநாயகர் சிலைகள் உருவாகி வருகின்றன. வருகின்றன என்பதை விட வந்து விட்டது என்றே கூறலாம்.


இதில் கோயில்களில் நகரமாக விளங்கி வரும் தஞ்சாவூரிலும் விநாயகர் சிலைகள் பரபரப்பாக தயாராகி உள்ளது. தயாராகிக்கொண்டும் உள்ளது. தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் செல்லும் வழியில் பழைய ஹவுசிங் யூனிட் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஜவகர்லால் என்ற வாலிபர் தன் பெற்றோருடன் தங்களின் கடையை விரித்துள்ளார். அதை கடை என்று கூட சொல்ல முடியாது கூடாரம் என்றுதான் கூற வேண்டும். புறம்போக்கு நிலத்தில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார். இன்றல்ல நேற்றல்ல... கடந்த 10 வருடங்களாக விநாயகர் சதுர்த்திக்கு முன்பே இங்கு வந்து கூடாரத்தை விரிக்கும் ஜவகர்லால் மூன்று அடியில் தொடங்கி 7 அடி உயரம் வரையுள்ள விநாயகர் சிலைகளை உருவாக்குகிறார்.


இவரை தேடி வந்து தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுக்கின்றனர். காரணம் இருக்கிறது. சுற்றுச்சூழலை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் சாக் பவுடரை கொண்டே இந்த சிலைகளை உருவாக்குகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பே இவர் வந்து இந்த சிலைகளுக்கு ஆர்டர் எடுத்து கிடுகிடுவென பணிகளில் இறங்கிறார் குடும்பத்தினருடன்.


தேங்காய் நார், சாக் பவுடர், வாட்டர் கலர் இதுதான் இவர்கள் சிலை தயாரிக்க பயன்படுத்துகின்றனர். இந்த பொருட்கள் எளிதில் கரைந்து விடும். மேலும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாது. இவர்களின் கைவண்ணத்தில் விநாயகர்கள் விதவிதமாக ஜொலிக்கின்றனர். சின்ன விநாயகர்... பெரிய விநாயகர்... என்று ஒவ்வொரு விநாயகரும் ஒவ்வொரு விதம்தான். இவர்களின் இந்த கூடாரத்திற்குள் நாம் சென்ற போதே குறைந்தது 75 விநாயகர் சிலைகள் விதவிதமான உயரத்தில் காணப்பட்டனர். அழகான கலரில் கண்ணை பறித்த விநாயகர்கள் அற்புதமாக காட்சியளித்தனர்.


வெவ்வேறு கலர்கள் வெவ்வேறு உருவ அமைப்பு என்று ஆர்டருக்கு தகுந்தபடி இங்கு விநாயகர் சிலைகள் ரெடி. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இங்கு தயாரான சிலைகள் பல்வேறு இடங்களுக்கு புறப்பட ரெடியாகி விடுவர். இதுகுறித்து ஜவகர்லாலிடம் கேட்டபோது தமிழிலேயே நன்றாக பதில் கூறினார். எப்படி என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது 10 வருடமாக இங்கு வந்து சிலைகள் தயாரித்து தருகிறோம். அப்படியே தமிழையும் கற்றுக் கொண்டு விட்டேன். சார்.


வந்தாரை வாழ வைக்கும் பூமி என்று தமிழகத்தை சொல்வாங்க... என்னை வாழவைப்பது தஞ்சாவூர் பக்தர்கள்தான் சார். ஆர்டர் மேல் ஆர்டராக குவிந்தாலும் அத்தனையும் ஏற்றுக்கொள்ளவதில்லை. என்னால் முடிந்ததை மட்டும்தான் செய்து தருகிறேன்.
ஆர்டர் கொடுத்தவங்களுக்கு செய்து முடிச்சுட்டேன். இருந்தாலும் கடைசி நேரத்தில் நிறைய ஆர்டர் வருது. அதில் அதிகமாக ஏற்றுக்கொள்ளாமல் முடிந்ததை ஏற்றுக்கொள்கிறேன். நாங்க சிலைகள் செய்ய "சாக்" பவுடரை மட்டுதான் உபயோகிக்கிறோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு கிடையாது.


பிளாஸ்ட் ஆப் பாரிஸ் உபயோகப்படுத்தினால் நிறைய சிலைகள் குறைந்த நேரத்தில் செய்ய முடியும் ஆனால் எங்களுக்கு அப்படி தேவையில்லை. அதேபோல் வாட்டர் கலர் மட்டும்தான் பெயிண்டாக உபயோகப்படுத்துகிறோம். வேறு எந்த ரசாயன கலரையும் பயன்படுத்துவதில்லை.


அதனால்தான் என்னை தேடி வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம்ட அதிகரிக்கிறது என்றார். நாம் அங்கு இருந்த சில மணித்துளிகளிலேயே அதிகளவில் ஆர்டர் கொடுக்க வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ராஜஸ்தானில் இருந்து வந்து பிள்ளையார் சிலைகளை வடிக்கும் இவர் காட்டும் நேர்மையை மற்ற பிள்ளையார் சிலைகள் செய்பவர்களும் காட்டினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது அல்லவா. இங்கு சிலைகள் ஆயிரத்தில் ஆரம்பித்து 8 ஆயிரம், பத்தாயிரம் வரை விற்பனையாகிறது. அதிகபட்சமாக 7 அடி உயரம் மூன்றரை அடி அகலம் வரை மட்டுமே ஆர்டர் எடுத்து செய்கின்றனர். இங்கு தயாராகும் சிலைகள் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.


Find Out More:

Related Articles: