நவராத்திரி... களைக்கட்டும் தஞ்சாவூர்... கொலுப்படிகளின் ஐதீகம்... புத்தம் புதுசா... கண்ணை கவரும்... கொலு பொம்மைகளின் வரத்து..

Sekar Tamil

தஞ்சாவூர்: 

புரட்டாசி மாதம் பிறந்தாலே கிராமங்கள் களைக்கட்ட ஆரம்பித்து விடும். குறிப்பாக அம்மன் கோயில்கள் ஜெகஜோதியாக தங்களை அலங்கரித்து கொள்ள ஆரம்பித்து விடும். காரணம் நவராத்திரி விழா. சிவபெருமானை தரிசிக்க எப்படி ஒருநாள் சிவராத்திரியோ... அதுபோல் அம்மனை வழிபட சிறந்த ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி விழா என்று கொண்டாடப்படுகிறது.


அதாவது புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அது என்ன ஒன்பது நாட்கள் கணக்கு என்கிறீர்களா? இருக்கே... காரணம் இருக்கே...


அம்பாள் மகிஷாசுரனை கொல்ல அவனுடன் 9 நாட்கள் போரிட்டார். பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். இந்த 9 நாட்களுமே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் என்று பிரித்து வணங்குகிறோம்.


நவராத்திரி விழாவின் 9 நாட்களும் வீடுகளில் கொலுப்படி அமைத்து அதில் சுவாமி உருவங்கள் முதற்கொண்டு பல பொம்மைகளை வைத்து அக்கம்பக்கத்தினரை அழைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதமாக கொடுத்து மகிழ்வது இன்றும் கிராமப்புறம் மற்றும் நகர் பகுதிகளில் காண கிடைக்கும் காட்சி. கொலுப்படிகள் 9 எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகள் வைக்கப்படுவது மரபு.


இப்படி படிகள் அமைக்கும் போது முதல்படி...அதாவது கீழிலிருந்து மேல் நோக்கி செல்ல வேண்டும். இந்த முதல்படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களுக்கு. இரண்டாம் படி ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும்.


மூன்றாம் படியில் மூன்றறிவு படைத்த கரையான், எறும்பு ஆகியவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும். நாலாம் படியில் நான்கறிவு உயிரினமான நண்டு, வண்டு ஆகியவற்றையும், ஐந்தாம்படியில் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகள் பொம்மைகள் வைக்க வேண்டும்.


ஆறாம் படியில் நாம்... அதாவது ஆறாம் அறிவான சிந்திக்கும், சிரிக்கும் தன்மை கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். ஏழாம் படியில் மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், முனிவர்கள் பொம்மைகளை வைக்க வேண்டும்.


எட்டாம்படி தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகளுக்கு சொந்தம். ஒன்பதாம் படி தெய்வங்களுக்கு உரித்தானது. முப்பெரும் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் பொம்மைகளும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி உருவ பொம்மைகளும் வைத்து நிறைவு செய்ய வேண்டும். இது நவராத்திரி படிகள் அமைக்கும் விதம்.


இந்த ஐதீகப்படி பொம்மைகள் தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் வந்து குவிந்துள்ளது. அழகழகான தெய்வங்களின் உருவ பொம்மைகள் கண்ணை கவர்கின்றன. அம்மனை வழிபடும் பக்தர்கள் உருவ பொம்மைகள் தத்ரூபமாக உள்ளது.



அதுமட்டுமா? திருமண காட்சியை அப்படியே பெயர்த்து எடுத்து வந்தது போன்ற பொம்மைகள் அம்சமாக உள்ளன. தூணை பிளந்தபடியே வரும் நரசிம்மர் அப்படியே நேரில் உள்ளது போல் மிரட்டுகிறார். புதுவரவாக கும்பகர்ணன் தூக்கத்தில் இருப்பதை போலவும் அவனை எழுப்ப வீரர்கள் முயலும் பொம்மை மனதை கொள்ளையடிக்கிறது. 




இவற்றை விட காஞ்சி மகாபெரியவரின் தத்ரூப பொம்மை கையை உயர்த்தி நம்மை ஆசிர்வதிக்கிறது. பார்க்க பார்க்க சலிக்காத அருளை அள்ளித்தரும் ராகவேந்திர சுவாமிகளின் உருவ பொம்மை மனதை அள்ளுகிறது. வரிசை கட்டி நிற்கும் கிரிக்கெட் வீரர்கள் பொம்மை, இந்த கால நவநாகரீக மக்கள் மறந்தே போன அம்மி, ஆட்டுக்கல், முறம், கூடை, திருவை ஆகியவற்றின் மினியேச்சர் போல் உள்ள பொம்மைகள், விஷ்ணுவின் அவதாரங்களின் வரிசை, பாரதியார், சுவாமி உருவங்கள், குழலூதும் கிருஷ்ணன், புத்தம் புது வரவான மல்யுத்த வீரர் உருவபொம்மைக்கு அதிக வரவேற்பு உள்ளது. 




இவை மட்டும்தானா... இன்னும்... இன்னும்... இன்னும் என்று கிராமிய கலையை விளக்கும் பொம்மைகள், பீமன் மகன் கடோத்கஜன் உணவு சாப்பிடுவதை விளக்கும் பொம்மை... கைலாய காட்சி, தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடையும் பொம்மை, ராவணனுடன் ராமர் போரிடும் போர்கள காட்சி பொம்மை என்று ஏராளமாக உள்ளது. 


மேலும் புத்தம் புது வரவாக தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிலை செய்யும் பொம்மைகள், ராமேஸ்வர பூஜை செட் என்று ஏராளமான பொம்மைகள் வந்து நவராத்திரியை களை கட்ட செய்துள்ளது. சரியான விலையில் கிடைக்கும் இந்த பொம்மைகளை வாங்க மக்களும் ஆர்வத்துடன் வருகின்றனர். நவராத்திரியை நன்றாக கொண்டாடி மகிழ்வோம்...


Find Out More:

Related Articles: